articles

img

யார் தேசவிரோதி? ஆர்எஸ்எஸ்சா... அரசை விமர்சிப்பவர்களா?

“தேசவிரோத நாசகர சக்திகள், கொரோனாவால் ஏற்பட்டுள்ள இன்றைய  மோசமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, நாட்டில் அவநம்பிக்கையையும், அரசாங்கத்துக்கு எதிரான மனநிலையையும் உருவாக்கிவிடுவார்கள். எனவே, நாமும்(ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகள்), ஊடகங்களும் அழிவுசக்திகளின் நாசகரத் திட்டங்கள் மீது கவனமாக இருக்க வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பேல், கடந்த ஏப்ரல் 24 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மூச்சுவிட முடியாத தருணத்தில்...
ஆர்.எஸ்.எஸ் தலைவர் அறிக்கை வெளியிட்ட தருணத்தில் தான், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தில்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நோயாளிகள் மரணிக்கும் செய்தி நம் நெஞ்சைத் துளைத்தது. இந்த மாநிலங்களில் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கோ, புதைப்பதற்கோ இடமின்றி பொதுவெளியில் எரிக்கப்பட்ட துயரக் காட்சிகளை சர்வதேச ஊடகங்களில் கூட நாம் காண நேர்ந்தது. பாஜக ஆட்சி செய்யும் பெரும்பாலானமாநிலங்கள் கோவிட் தொற்று எண்ணிக்கை, மரண எண்ணிக்கை என எல்லாவற்றிலும் குளறுடிகள் செய்து எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டின.

ஹோஸ்பேல் அறிக்கை வெளியிட்ட காலத்தில் தான், ’எங்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்!’ என மருத்துவமனைகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும் அளவுக்கு நாட்டில் நிலைமை மோசமானது. நள்ளிரவில் அவசர வழக்காக அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ’நீங்கள், கெஞ்சியோ, கடன்வாங்கியோ, திருடியோ ஆக்சிஜனைப் பெற்று மக்களைக் காப்பாற்றுங்கள்!’ என அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. ‘மக்கள் மூச்சு விடுவதற்கு ஆக்சிஜன் வேண்டும்’ என மருத்துவ
மனைகள் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலைமையை, சுதந்திர இந்தியாவில் இதுவரை நாங்கள் கண்டதே இல்லை என மருத்துவர்கள் வேதனைப்பட்டார்கள்.இத்தகைய கொடூரமான சூழ்நிலையைத் தட்டிக்கேட்டு, சக இந்தியக் குடிமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவர்களைத்தான், ‘நாசகர சக்திகள், தேச விரோதிகள்’ எனச் சித்தரித்து, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் அறிக்கை விடுகிறார்.

ஆக்சிஜனுக்காக அலைபாயும் தேசம்
ஹோஸ்பேல் அறிக்கை வெளியிட்ட ஏப்ரல் 24 அன்று ஆர்.எஸ்.எஸ் சீடரான மோடி பிரதமராகஆட்சி செய்யும் இந்தியாவில், பதிவான புதிய கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 3,48,941. அன்றைக்கு நிகழ்ந்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 2,797. நீதிமன்றம் ஆக்சிஜனை எப்படியாவது உறுதிசெய்யுங்கள் என அரசாங்கத்துக்கு உத்தரவிட்ட பிறகும்கூட, அந்த அறிக்கைவெளியான ஏப்ரல் 24 அன்று கூட, இந்தியா முழுவதும் மருத்துவமனைகளை வைத்திருக்கும் மிகப்பெரும் கார்ப்பரேட் மருத்துவமனை கள்கூட (மேக்ஸ், ஃபோர்டிஸ்), ‘‘எங்கள் தில்லி மருத்துவமனைகளில் இன்னும் சில மணிநேரங்கள் தான் ஆக்சிஜன் இருப்பு இருக்கிறது. உடனடியாக ஆக்சிஜன் அனுப்புங்கள்!” எனத் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அவசர உதவிக் கோரிக்கைகளை வெளியிட்டன. ‘‘ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால், ஆக்சிஜன் தேவைப்படும் தீவிர சிகிச்சை  நோயாளிகளுக்கு எங்களால் சிகிச்சை அளிக்க முடியவில்லை, அவர்களை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள்” என மருத்துவமனைகள் நோட்டீஸ் ஒட்டின.

இரண்டு ‘மாடல்கள்’
இந்தியாவில் இரண்டாம் அலை வரப்போகிறது என உலகம் முழுவதிலும் இருந்து அறிவியலாளர்கள் எச்சரித்தார்கள். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2020 நவம்பர் மாதமே எச்சரித்தது. ஆனால்,  நாடாளுமன்ற நிலைக்குழு  வழங்கிய எச்சரிக்கையையும், ஆலோசனையையும் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நிராகரித்து, நாடு ஆக்சிஜன்தன்னிறைவை எட்டிவிட்டது எனப் பொய்யானமதிப்பீட்டைத் தந்தார். பிரதமரும், நிலைக்குழுவின் எச்சரிக்கையை காதில் போட்டுக்கொள்ள வில்லை. ஆனால், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், முதல் அலை காலத்திலேயே, எதிர்காலத்தில் மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை எவ்வளவு இருக்கும் எனக் கணித்து, ஒரே வருடத்தில் தனது மாநிலத்தின் ஆக்சிஜன் தேக்கத் திறனை 58% சதவிகிதம் அதிகரித்தது. இன்றைக்குக் கேரளா தன்னுடைய தேவையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்வ
தால், தமிழ்நாடு, கர்நாடகா, கோவா உள்ளிட்டமாநிலங்களுக்கு தன்னுடைய உபரி ஆக்சிஜனை வழங்கி வருகிறது.

பட்டேல் சிலைக்கு 3000 கோடி செலவழித்துவிட்டு, ஆக்சிஜன் இன்றி மக்கள் இறக்கும் அளவிலான கட்டமைப்புதான் குஜராத் மாடல். 58 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கேரள மாடல்.மார்ச் மாதத்தில் குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து இரண்டாம் அலையின் வருகையை அறிவித்தது. இருந்தும் லட்சோப லட்சம் பேர் பங்கேற்கும் கும்பமேளாவையும் அனுமதித்து நடத்தி, ‘சூப்பர் ஸ்பிரட்டராக (அதிவேக தொற்று பரப்புநர்) இருந்தது என உலகின் முன்னணிப் பத்திரிகைகள் எல்லாம் மோடி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தன.

தடுப்பூசியிலும் தனியார் ராஜ்யம்
கொரோனா தொற்று தொடங்கியது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இன்றைக்கு 16 மாதங்கள் கழித்தும், நாம் அதனுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். கொரோனா தடுப்பு, சிகிச்சைக்கான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது என, எது குறித்தும் மத்திய அரசிடம் முறையானதிட்டம் ஏதும் இல்லை. கடந்த காலங்களில், அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டங்களை பல முறை அமல்படுத்தி, பல நோய்களைஒழித்த, கட்டுப்படுத்திய பெருமை நமது நாட்டிற்கு உண்டு.  இன்றைக்கு உலகத்தையே நிலைகுலையச் செய்து புரட்டிப் போடும், இந்தக்கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் இலவச தடுப்பூசி கட்டாயம் என்பதை சாமானியர்கள் கூட உணர முடியும்.  இருந்தும் மத்திய அரசாங்கம் கோவிட் தடுப்பூசித்திட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்காக்க ஆவண செய்யாமல், தடுப்பூசி உரிமம் வழங்குவது, நிதி ஒதுக்கீடு செய்வது, தடுப்பூசிக் கொள்கை வடிவமைப்பது என அனைத்து வகைகளிலும் தனியார் தடுப்பூசி நிறுவனங்கள் கொள்ளை லாபத்தைச் சுருட்டுவதற்கான உதவிகளைச் செய்கிறது.  

தடுப்பூசி கேட்பது தேச துரோகமா?
இரண்டே இரண்டு தனியார் கம்பெனிகளிடம் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் பணியை வழங்கியது. ஒரே மருந்திற்கு, மத்திய அரசுக்குஒரு விலையும், மாநில அரசுக்கு ஒரு விலையும்,தனியாருக்கு ஒரு விலையும் இரண்டு தனியார் நிறுவனங்களும் நிர்ணயிக்கத் துணை போகிறது. தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித மருந்துகளை எனக்குக் கொடுத்தது போக, மீதம் 50 சதவிதத்தை மாநில அரசுகளும், தனியாரும்பெற்றுக்கொள்ளலாம், என்ற விதியை வகுத்து, சந்தையில் மாநில அரசுகளை தனியாருடன் மோதவிடுகிறது.  மத்திய அரசாங்கம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இலவச தடுப்பூசி வழங்கும்; மாநிலங்கள் வேண்டுமானால் 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தங்கள் செலவில் இலவசமாக வழங்கலாம்; அல்லது அந்த வயதினர்  தனியாரிடம் தடுப்பூசி வாங்கிப் பயன்படுத்தலாம் எனச் சொல்கிறது. கோவிட் போன்ற கொள்ளைநோய்க் காலத்திலும், மோடிக்கு மக்கள் நலன் முக்கியமாகப் படுகிறதா அல்லது கார்ப்பரேட் நலன் முக்கியமாகப்படுகிறதா எனக் கேள்வி கேட்டு, நிலைமையை சரி செய்ய முனைபவர்களைத்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை ‘தேசத் துரோகிகள்’ இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பிரதமர் பெயரில் தொடங்கப்பட்ட ஒரு நிதியத்தின் வரவு செலவுக் கணக்கு எப்படிப் பரம ரகசியமாக இருக்க முடியும்? வெளிப்படைத் தன்மையற்ற, ஜனநாயக விரோதமான இந்த அணுகுமுறை பற்றி ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் சொல்லாது.ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டலில் வளர்ந்து,நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பாஜகவோ நாடு பற்றி எரியும் போது, தலைநகர் தில்லியில் 20,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற வளாகத்தை பார்த்துப் பார்த்துச் செதுக்கிக்கொண்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான சக்திகளும், தேச பக்த சக்திகளும் பேரிடர் காலத்தில்செய்ய வேண்டிய செயல் இதுதானா?

யோகி அரசின் கொடிய செயல்கள்
அரசாங்கத்தை விமர்சித்தால் தேசத் துரோகக் குற்றம் பாயும் என்று மிரட்டி, பீமா கொரேகான் சம்பவம், ஹத்ராஸ் பாலியல் சம்பவம் என, பல்வேறு சம்பவங்களுக்காகக் குரல் கொடுத்த சமூகப் போராளிகள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் தேசத் துரோக வழக்கு போட்டு, அலைக்கழித்து வருகின்றன மத்திய பாஜக அரசாங்கமும், பாஜகவின் மாநில அரசாங்கங்களும். ஹத்ராஸ் பாலியல் குற்றச் சம்பவத்தை விசாரித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மீது  தேசத் துரோக வழக்கைப் புனைந்து சித்ரவதை செய்து வருகிறது யோகியின் உ.பி., அரசாங்கம். சிறையில் இருந்த நிலையில் கப்பானுக்கு கொரோனா வந்து, அவர் சுயநினைவின்றி கீழே மயங்கிக் காயமடைந்த நிலையில்,  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் கட்டிலில் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என அவருடைய மனைவி ரெய்ஹானத் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

‘‘கப்பானுக்கு மனிதநேயத்துடன் சிகிச்சை அளியுங்கள்!”  எனக் கேரள முதல்வர் பினராயி, யோகிக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். கப்பானின் மனைவிதொடுத்த வழக்கின்பேரில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். உ.பி., மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை  உ.பி.,நீதிமன்றங்களே விமர்சித்திருக்கும் நிலையிலும்கூட, ‘உ.பியில் ஆக்சிஜன் இல்லை என யாராவது சொன்னால், அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பாயும், அவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்படும்’ என அராஜகமாக மிரட்டியுள்ளார் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத். துளிகூட நிர்வாகம் செய்யத் தெரியாமல், மக்களைச் சாக விடுவது தேசத் துரோகமா? இல்லை ஆக்சிஜனை உறுதிசெய்யுங்கள் என அரசின் கவனத்திற்குக் கொண்டு வருபவர்கள் தேசத் துரோகிகளா? தன்னுடைய தாத்தாவுக்கு ஆக்சிஜன் வேண்டும், உதவுங்கள் என ட்வீட் போட்ட இளைஞர் மீது உ.பி., போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின்சீடர்கள் செய்யும் தேசபக்த காரியங்களாக இருக்கின்றன. 

எது தேசபக்தி?
ஹரியானா மாநிலத்தின் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டாரோ,  கொரோனா மரண எண்ணிக்கையில் நடக்கும் குளறுபடிகளைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு எரிச்சலடைந்து, “நீங்கள் என்ன கூச்சல் போட்டாலும், செத்தவர்கள் திரும்பி வரப் போவதில்லை. பிறகு ஏன் கூச்சலிடுகிறீர்கள்’’ எனச் சத்தம் போட்டிருக்கிறார். இத்தகைய இழிவான,பொறுப்பற்ற தன்மைதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகராதியில் தேசபக்த செயல்பாடா?ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரகராக இருந்தவர்தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. மதரீதியில் மக்களை பிளவுபடுத்தி, மதச்சார்பற்ற இந்தியாவை, மதவெறி அடிப்படையிலான இந்து ராஷ்டிரமாக மாற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின்அடிப்படை நிகழ்ச்சி நிரல். மத்தியில் கிடைத்துள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதே பாஜகவின் நோக்கம். இந்த நோக்கத்திற்காக செயல்படும் அரசாங்கத்தை யாரும் விமர்சிக்கக்கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் பாஜக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை தேசத் துரோகிகள் என முத்திரை குத்துகிறது ஆர்.எஸ்.எஸ். 28.04.2021 இரவு 11.30 நேரப்படி புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3, 79, 237. இறந்தவர்கள் எண்ணிக்கை 3535. தொற்றும், இறப்பும் தொடர்ந்து அதிகரிக்கிறது எனும் சூழ்நிலையில், மத்திய-மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சொல்வது தேச விரோதமல்ல, அது தேசப்பற்று மிக்க கடமை!

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;